Sudden fire in a coal lorry: நிலக்கரி ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ; பெரும் சேதம் தவிர்ப்பு

விழுப்புரம்: A coal lorry parked near Senchi caught fire suddenly and there was a commotion. செஞ்சி அருகே நிறுத்தப்பட்டிருந்த நிலக்கரி லாரியில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

சென்னையை அடுத்த எண்ணூர் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு நிலக்கரியை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று செஞ்சி அருகே உள்ள செம்மேடு பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை நோக்கி வந்து கொண்டிருந்தது. சித்தாபூண்டி கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.

இந்நிலையில், செஞ்சி-திண்டிவனம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு டிரைவர் மணி குளிக்கச் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது லாரியின் பின்பகுதியில் உள்ள நிலக்கரியில் இருந்து புகை வெளியேறியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அருகில் சென்று பார்த்தபோது நிலக்கரி தீப்பிடித்து எரிய தொடங்கியதை அறிந்த மணி உடனடியாக செஞ்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

தகவலின்பேரில் செஞ்சி தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நிலக்கரியின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தீவிபத்துக்கான காரணம் உடனடியாக தொியவில்லை.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலக்கரி ஏற்றி வந்த லாரியில் எப்படி தீ பிடித்தது என்பது பற்றி செஞ்சி போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீவிபத்தில் லாரியில் சேதம் அடைந்த பாகங்கள் பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.