Cyclone warning: உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை; புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: 3rd storm warning cage has been installed in Tamilnadu ports. தமிழக துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்காள கடலின் தென்கிழக்கு பகுதியின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 630 கிலோமீட்டர் மற்றும் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே 670 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம்-புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாகப்பட்டினம், காரைக்கால்,சென்னை, காட்டுப்பள்ளி, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. திடீர் காற்றுடன் மழை பெய்திடும் என்பதை குறிக்கும் வகையில் இந்த மூன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் சின்னம் காரணமாக நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதேபோல் மறு அறிவிப்பு வரும் வரை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.