Sathanur Dam Flood Alert: சாத்தனூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவண்ணாமலை: A flood warning has been issued to the public as the flow of water to the Sathanur dam has increased.: சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னகேசவ மலைகளுக்கு இடையே தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும். தமிழகத்தில் உள்ள அணைகளில் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த அணை திருவண்ணாமலை நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், செங்கம் அருகேயும் அமைந்துள்ளது. இந்த அணை 1958ம் ஆண்டில் காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது. இங்கு அழகிய பூங்காவும, ஆசியா கண்டத்தில் மிகப்பெரிய முதலைப்பண்ணை ஒன்றும் உள்ளது. இதன் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடிகள். முழு அளவு 119 அடி உயரம். திருவண்ணாமலை உட்பட பல பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பாசன வசதியையும் அளிக்கிறது. இந்த அணையில் 7,321 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாகவும் மற்றும் கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் கடந்த வாரம் சாத்தனூர் அணை 117 அடியை எட்டியுள்ளது. இதனிடையே அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீரை வெளியேற்றி வந்தனர். தற்போது பரவலாக பலத்த மழை பெய்து வருவதால், மீண்டும் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,225 கன அடியாக உள்ளது. ஆனால் சாத்தனூர் அணையில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் அணைக்கு வரும் 4,225 கன அடி நீரையும் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் மதகுகளின் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் தென்பெண்ணை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.