Rapidly receding Mullaperiyar dam: வேகமாக குறைந்து வரும் முல்லைப்பெரியாறு அணை

தேனி: Due to lack of rain, the water level of Mullaperiyar dam is decreasing rapidly. மழை குறைவு காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

தேனி மாவட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக நல்ல மழைப்பொழிவு இருந்து வருகிறது. அணைகளின் நீர் மட்டம் மிகவும் திருப்திகரமாக இருந்து வருகிறது. அதேபோல் கண்மாய்கள், குளங்கள் என அத்தனை நீர் நிலைகளும் நிறைந்து காணப்படுகின்றன. மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம், நல்ல முறையில் அதிகரித்துள்ளது.

இதனால் தோட்டக்கலை சாகுபடியும், விவசாய சாகுபடியும் அதிகம் நடந்து வருகிறது. குறிப்பாக நெல் விளைச்சல் சில ஆண்டுகளாகவே அமோகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், டிசம்பர் கடைசி வாரம் வரை அவ்வப்போது, துாறலும், சாரலும் தேனி மாவட்டத்தில் இருந்தது. இதனால் டிசம்பர் மாதம் கடைசியில் பெரியாறு அணை நீர் மட்டம் 142 அடியை எட்டியது.

இந்தநிலையில், மழை குறைந்ததால் நீர்மட்டம் மெல்ல, மெல்ல குறைந்தது. நீர் வரத்து குறைவாக இருந்த நிலையில், விவசாய சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இன்று காலை அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 100 கனஅடிக்கும் கீழே வந்தது. அதாவது விநாடிக்கு வெறும் 91 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1867 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 138.80 அடியாக குறைந்துள்ளது.

இனிமேல் நீர் மட்டம் உயரும் அளவிற்கு மழை பெய்யும் அறிகுறிகள் இல்லை. தற்போது இருக்கும் நீர் நெல் சாகுபடிக்கும், கோடை கால குடிநீர் தேவைக்கும் போதுமானதாக உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வைகை அணை நீர் மட்டம் 51.80 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1419 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனங்களுக்கும், சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டத்தின் பாசனத்திற்கும் (இந்த இரு மாவட்டங்களில் பல இடங்களில் நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை) அணையில் இருந்து விநாடிக்கு 2669 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.