Fire Incident At Madurai Collectorate: மதுரை: ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்தால் பொங்கல் பரிசுகள் எரிந்து நாசம்

மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் (Fire Incident At Madurai Collectorate) பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த வேட்டி, சேலைகள் எரிந்து நாசமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு அரசு சார்பில் வேட்டி, சேலைகள் வழங்கப்படுவது வழக்கம். அதே போன்று மதுரை மாவட்டத்தில் வழங்குவதற்கு ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தின் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் வேட்டி, சேலைகள் வைக்கப்பட்டுள்ளது. இங்கு நள்ளிரவில் திடீரென்று தீப்பற்றி எரிவதாக அலுவலக வளாகத்தில் உள்ள காவலர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்புத்துறையினர் சென்றனர். சுமார் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதன் பின்னர் அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் மதுரை மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்காக விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 5,0000 வேட்டி, சேலைகள் எரிந்து நாசமானது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.