Rainwater drainage works: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை உடனடியாக முடிக்க மாநகராட்சி உத்தரவு

சென்னை: Corporation orders immediate completion of rainwater drainage works in Chennai. சென்னையில் மழை காரணமாக நிறுத்தப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை உடனடியாக முடிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை சென்னையில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னையின் ஒருசில பகுதிகளில் 48 மணிநேரத்திற்குள் 15 செமீ. முதல் 35 செமீ. வரை மழை பெய்துள்ளது.

கடந்த 6 மாத காலத்தில் சென்னையில் பெருமளவு மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்களிலும், நீர்வழிக்கால்வாய்களிலும் வண்டல்கள் தூர்வாரும் பணி பல்வேறு நிலைகளில் கண்காணிப்பு அலுவலர்கள் மூலமாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக அதிகளவு மழை பெய்தும் மாநகரின் பிரதான பகுதிகளில் மழைநீர் தேக்கம் இல்லை .

தற்சமயம் மழைப் பொழிவு இல்லாத நிலையில் கடந்த 4 நாட்களில் பெய்த மழையின் காரணமாக சாலை மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள திடக்கழிவுகள், மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக அகற்றும் பணியினை தொடங்க நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதனடிப்படையில், தீவிர தூய்மைப்பணி, சாலைகளை தற்காலிகமாக சீரமைத்தல், மழைநீர் வடிகால்களில் உள்ள வண்டல் வடிகட்டி தொட்டிகளை (Silt Catch Pit) தூர்வாருதல் போன்ற பணிகளை உடனடியாக மேற்கொள்வது தொடர்பாக மண்டல அலுவலர்கள் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, புதியதாக மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ள இடங்களில் முடிக்கப்படாத வண்டல் வடிகட்டி தொட்டிகளை உடனடியாக அமைக்கவும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வண்டல் வடிகட்டி தொட்டிகளில் சேகரமாகியுள்ள வண்டல்களை அகற்றவும், வண்டல் வடிகட்டி தொட்டி மற்றும் மழைநீர் வடிகாலுடன் இணைக்கும் குழாய் (Chute Pipe) பொருத்தப்படாத இடங்களில் குழாய் பொருத்தவோ அல்லது தற்காலிக ஏற்பாடாக துளை இடவோ ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வண்டல் வடிகட்டி தொட்டிகளில் உள்ள திடக்கழிவுகளை அகற்ற மாநகராட்சியின் சாலைப்பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மழையின் காரணமாக சாலைகளில் எற்பட்டுள்ள சிறு பள்ளங்களை உடனடியாக சீர்செய்ய மாநகராட்சியின் பேருந்து சாலைகள் துறை அலுவலர்களுக்கும், சாலை மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள திடக்கழிவுகளை அகற்றும் வகையில் தீவிர தூய்மைப்பணி மேற்கொள்ள திடக்கழிவு மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நடைபெற்று வந்த மழைநீர் வடிகால் பணிகளில் பருவ மழையின் காரணமாக ஒருசில இடங்களில் முடிக்கப்பெறாமல் நிறுத்தப்பட்ட மழைநீர் வடிகால் இணைப்புகளை உடனடியாக மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.