Rain Flood in Theni: தொடர் கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் தேனி

தேனி: Due to the heavy rain yesterday in Theni, the roads are flooded and the houses are flooded. தேனியில் நேற்று பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தேனி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. பின்னர் சாரல் பெய்தது. இன்று காலை நிலவரப்படி ஆண்டிபட்டியில் 83.8 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 59 மி.மீ., வீரபாண்டியில் 17.2 மி.மீ., பெரியகுளத்தில் 35 மி.மீ., மஞ்சளாறில் 6 மி.மீ., சோத்துப்பாறையில் 64 மி.மீ., வைகை அணையில் 54 மி.மீ., போடியில் 28.6 மி.மீ., உத்தமபாளையத்தில் 2 மி.மீ., கூடலுாரில் 3.6 மி.மீ., பெரியாறு அணையில் 15.2 மி.மீ., தேக்கடியில் ஒரு மி.மீ., சண்முகாநதியில் 7.2 மி.மீ., மழை பெய்தது.

இந்த மழையால் தேனி பழைய பஸ்ஸ்டாண்ட் வழக்கம் போல் வெள்ளத்தில் மூழ்கியது. பழைய பஸ்ஸ்டாண்டில் முழங்கால் அளவு தண்ணீர் சூழ்ந்தது. இதேபோல் தேனியில் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வைகை ஆறு, முல்லைப்பெரியாறு, கொட்டகுடி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வைகை அணைக்கு விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வரை நீர் வரத்து இருந்தது. அணை நீர் மட்டம் 71 அடியை எட்டியதால் வந்த நீர் முழுக்க வெளியேற்றப்பட்டது.

மழை குறைந்ததும், படிப்படியாக நீர் வரத்தும் குறைந்தது. இன்று காலை 6 மணிக்கு அணைக்கு விநாடிக்கு 5200 கனஅடி நீர் வந்தது. வரும் நீர் முழுக்க வெளியேற்றப்பட்டு நீர் மட்டம் 70 அடியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 137 அடியை தாண்டியது. அணைக்கு விநாடிக்கு 1109 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 511 கனஅடி தண்ணீர் தமிழகப்பகுதிக்கு திறந்து விடப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 55 அடியை எட்டியது. (முழு நீர் மட்ட உயரம் 57 அடி). சோத்துப்பாறை அணை முழு நீர் மட்டம் 126.87 அடியை தாண்டியது. இதனால் முழு நீர் மட்ட உயரத்தை தாண்டியதால், அணை பொங்கி வழியத்தொடங்கியது. சண்முகாநதி அணை நீ்ர் மட்டமும் முழு கொள்ளவான 52.55 அடியை எட்டியது. இதனால் அணைகளுக்கு வரும் நீர் முழுக்க வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த மழையால் மூன்று வீடுகள் மட்டும் சேதம் அடைந்தன. குன்னுார் பகுதியில் பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தண்ணீரை வெளியேற்றச் சொல்லி பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மின் பணியாளர்கள் உடனுக்குடன் மின் இணைப்புகளை சரி செய்தனர். இன்றும் பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே முல்லைப்பெரியாறு, வராகநதி, வைகை ஆறு, கொட்டகுடி ஆறு, மஞ்சளாறு பகுதிகளில் வசிப்பவர்கள் கனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேனி சிவாஜி நகரில் வெள்ளம் சூழ்ந்த வீட்டிற்குள் சிக்கிய உடல்நலம் பாதிக்கப்பட்ட நபரை நகராட்சி துணைத்தலைவர் செல்வம், தனது முதுகில் சுமந்து வந்து பாதுகாப்பாக வெளியேற்றினார். இவரை மீட்க என்ன செய்வது என நகராட்சி பணியாளர்கள் தவித்த நிலையில், துணைத்தலைவர் செல்வம் அந்த நபரை சுமந்து வந்து வெளியேற்றியது பெரும் வரவேற்பினை பெற்றது.