அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு.. திரண்ட இளைஞர்கள்.. சென்னையிலும் வெடித்த போராட்டம்..

agnipath-protest
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு.. திரண்ட இளைஞர்கள்.. சென்னையிலும் வெடித்த போராட்டம்..

Agnipath scheme: கடந்த செவ்வாய்கிழமை அன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் , 4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் புதிதாக ஆள்சேர்க்கும் அக்னிபத் என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். மேலும் இந்த திட்டத்தில் சேரும் இளைஞர்களில் 25 % பேர் மட்டுமே 4 ஆண்டுகளுக்கு பிறகு நிரந்தரம் செய்யப்படுவர். மற்ற அனைவருக்கும் கட்டாய ஒய்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனால் நாடு முழுவதும் இராணுவத்தில் சேருவதற்கு தயாராகும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பீகார், ஹரியானா, உத்தர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மேலும் ரயில்களுக்கு தீ வைப்பு சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. இதனால் நாடு முழுவதும் பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

இதனிடையே எதிர்கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். வட மாநிலங்களை தொடர்ந்து நேற்று தெலுங்கானாவிலும் போராட்டம் வெடித்தது. இதனை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று சென்னையிலும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை தலைமை செயலகம் அருகே உள்ள போர் நினைவு சின்னம் அருகே 200 க்கும் மேற்பட்ட ராணுவத்தில் சேர தயாராகும் பயிற்சி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை அனைத்தும் முடித்து ராணுவத்தில் சேர தயாராக இருக்கும் நிலையில், மத்திய அரசு இதுபோன்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்து உள்ளதால் நாடு முழவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கோவை , திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த இளைஞர்கல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசு உடனடியாக அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் தமிழக அரசு அதற்கு வலியுறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இதையும் படிங்க: Corona virus: இந்தியாவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு