Traffic diversion in Chennai: சென்னையில் 10ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை: Permanent traffic diversion in Chennai. நெற்குன்றம் சிக்னல், பெரியார்பாதை சிக்னல் மற்றும் விநாயகபுரம் சிக்னல் சந்திப்புகளில் 10ம் தேதி முதல் நிரந்தர போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக ஏற்கனவே 23.07.2022 அன்று நெற்குன்றம் சிக்னல், பெரியார்பாதை சிக்னல் மற்றும் விநாயகபுரம் சிக்னல் ஆகிய மூன்று இடங்களிலும் CENTER MEDIAN மூடப்பட்டு தற்போது நல்ல முறையில் போக்குவரத்து சீராக செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் நெற்குன்றம் சிக்னல், பெரியார்பாதை சிக்னல் மற்றும் விநாயகபுரம் சிக்னல் சந்திப்புகளில் ஏற்படும் நெரிசல்களை குறைக்க கடந்த 23.07.2022 முதல் சோதனை ஓட்டமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது நிரந்தர போக்குவரத்து மாற்றமாக அறிவித்துள்ளது.

அதன்படி,

  1. வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் வாகனங்கள் நெற்குன்றம் சந்திப்பில் ‘U’ திருப்பம் செய்ய விரும்புபவர்கள் நேராக சென்று 170 மீட்டர் தூரத்தில் தூண் எண் 126 மற்றும் 127 இடையில் புதியதாக அமைந்துள்ள ‘U’ திருப்பத்தில் திருப்பி செல்லலாம்.
  2. வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் வழியில் பெரியார்பாதை சந்திப்பில் U’ திருப்பம் மற்றும் வலதுபக்கம் செல்லும் வாகனங்கள் கோயம்பேடு திசையில் 238 மீட்டரில் அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையில் புதிதாக அமைந்துள்ள ‘U’ திருப்பத்தில் திரும்பிக்கொள்ளலாம். விநாயகபுரம் சந்திப்பில் U’ திருப்பம் மற்றும் MMDA Colony வலதுபுறம் திரும்பி செல்ல விரும்பும் வாகனங்கள் 496 மீட்டர் தொலைவில் உள்ள SAF Games Village ‘U’ திருப்பத்தில் திரும்பி செல்லலாம்.
  3. கோயம்பேடு திசையில் இருந்து வடபழனி நோக்கி வரும் வாகனங்கள் விநாயகபுரம் சந்திப்பை தாண்டி 243 மீட்டர் தொலைவில் உள்ள அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் உள்ள தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள U’ திருப்பத்தில் திரும்பி செல்லலாம்.
  4. பெரியார் சந்திப்பு மூடப்படுவதால் பெரியார்பாதை உள் இருந்து வரும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி செல்லவும் மற்றும் கோயம்பேட்டில் இருந்து வரும் வாகனங்கள் பெரியார்பாதைக்கும், நெற்குன்றம்பாதைக்கும் இடையில் 240 மீட்டர் தொலைவில் தூண் எண்கள் 126 மற்றும் 127 இடையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘U’ திருப்பத்தில் திரும்பி செல்லலாம்.
  5. கோயம்பேட்டில் இருந்து வரும் வாகனங்கள் நெற்குன்றம் சந்திப்பில் ‘U’ திருப்பம் மற்றும் வலதுபுறம் திரும்பும் வாகனங்கள் நேராக வடபழனி சர்வீஸ் ரோடு பாலத்தின்கீழ் 199 மீட்டர் தூரம் சென்று ‘U’ திருப்பம் எடுத்து செல்லலாம்.
  6. நெற்குன்றம் பாதையில் இருந்து வரும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி வடபழனி பாலத்தின்கீழ் உள்ள U’ திருப்பத்தில் திரும்பி செல்லலாம்.
  7. இந்த போக்குவரத்து மாற்றத்தினால் தற்போது நெற்குன்றம் சிக்னல், பெரியார்பாதை சிக்னல் மற்றும் விநாயகபுரம் சிக்னல்களில் வாகனங்கள் தங்கு தடை இன்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  8. சோதனை ஓட்டமானது நல்ல முறையில் இயங்கி வருவதால் மேற்கண்ட இடத்தில் நிரந்தரமாக 10.09.2022 முதல் அமல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுகொள்ளப்படுகிறது என காவல் துறை தெரிவித்துள்ளது.