Penalty To Tamil Nadu Govt: துப்புரவு பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்காத தமிழக அரசுக்கு அபராதம்

துப்புரவு பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் காலத்தாமதம் செய்து வந்த தமிழக அரசுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமாக விதித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் கடந்த 1992ம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறையில் துப்புரவுப் பணியாளராக சேர்ந்தார். அவருக்கு மாதம் ஊதியமாக ரூ.105 கொடுக்கப்பட்டு வந்தது. இதனிடையே கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி இவரது பணி முறைப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2012ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.

இதன் பின்னர் கடந்த 2002ம் ஆண்டில் இருந்து இவரின் சம்பளம் கணக்கிடப்பட்டு மாதம் ஓய்வூதியமாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் 1992ம் ஆண்டில் இருந்து தன்னுடைய பணியின் சம்பளத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இவரின் கோரிக்கையை பள்ளிக் கல்வித்துறை உதாஷணப்படுத்தியது. இதனால் மனவேதனை அடைந்த துப்புரவு பணியாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி 1992ம் ஆண்டில் இருந்து பணியை கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்ற உத்தரவை கடந்த 2017ம் ஆண்டு பிறப்பித்தார்.

ஆனால் தனி நீதிபதியின் உத்தரவை செயல்படுத்தாமல் மீண்டும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவானது இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்ததும் மட்டுமின்றி தனி நீதிபதியின் உத்தரவை 8 வாரங்களில் ஓய்வூதியம் அளிக்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.

ஆனால் மறுபடியும் நீதிபதிகளின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பாக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், மீண்டும் பள்ளிக் கல்வித்துறை சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவானது இரண்டு நீதிபதிகள் அமர்வு முன்பாக நேற்று (டிசம்பர் 14) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், துப்புரவுப் பணியாளர், பணி ஓய்வுக்குப் பின்னர் தன்னுடைய பணிக்கால பலன்களைப் பெறுவதற்கு பல வழக்குகளை சந்தித்து வருவது வேதனை அளிக்கும் விஷயமாகும்.

எனவே துப்புரவுப் பணியாளருக்கு உடனடியாக ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும். அது மட்டுமின்றி இவரது உரிமையை பெற விடாமல் தட்டிக்கழித்து வந்த தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத பணத்தை உச்ச நீதிமன்ற பணியாளர் நலச் சங்கத்திடம் அளிக்க வேண்டும். அது மட்டுமின்றி துப்புரவுப் பணியாளருக்கு எதிராக வழக்கு போட முடிவு செய்த பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்து வசூல் செய்து கொள்ளலாம் என்ற உத்தரவை பிறப்பித்தனர்.