Pamban Rail Bridge Paralyzed: 19 வது நாளாக முடங்கிய ராமேஸ்வரம் ரயில்வே பாலம்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் (Pamban Rail Bridge Paralyzed) மிகப்பெரிய ஆன்மீக சுற்றுலாத் தலம் உள்ளது. அங்கு ராமநாதசுவாமி கோயில் உள்ளது. இதனை தரிசிப்பதற்காக தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.

இது போன்று வருபவர்கள் ரயில்கள் மற்றும் பேருந்துகள், தனியார் வாகனங்கள் மூலமாக ராமேஸ்வரம் வருகை தருவர். அது போன்று வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் ரயில்கள் ராமேஸ்வரத்திற்கு வரும். ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி முதல் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில்வே பாலம் மூடப்பட்டு பயணிகள் ரயிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது 109 வயதான பாம்பன் கடல் ரயில் பாலம் வலுவாக இருப்பதாக ஐ.ஐ.டி. குழுவினர் தெரிவித்தனர். இருந்தபோதிலும் பராமரிப்பு பணி நடக்காமல் கடந்த 19 நாட்களாக போக்குவரத்து முடங்கியிருப்பது பயணிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் 23ம் தேதி ராமேஸ்வரம் தூக்கு பாலத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் அன்றைய நாள் முதல் ஜனவரி 10ம் தேதி வரை ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. ஆனால் இன்றுடன் 19 வது நாளை எட்டியுள்ள நிலையில் இன்னும் ரயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். விரைந்து ரயில்வே பாலத்தை சரிசெய்து மீண்டும் ரயில்களை இயக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகும்.