New low pressure area formed: அரபிக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை: New low pressure area formed in the Arabian Sea. கேரள- கர்நாடக கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. வட தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மாண்டஸ் புயல் சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. இதனால் உள் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் தற்போது அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரள-கர்நாடக கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை 17ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

13.12.2022: லட்சதீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

14.12.2022: லட்சதீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

15.12.2022 மற்றும் 16.12.2022: மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது.