500 million euro Financing Agreement:ஜெர்மன் வங்கியின் 500 மில்லியன் யூரோ நிதியுதவிக்கான ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

சென்னை: German bank Financing Agreement for 500 million euro financing. ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் 500 மில்லியன் யூரோ நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் மூன்றாம் கட்ட நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி – தமிழ்நாடு திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் தமிழக முதல்வர் முன்னிலையில் பரிமாற்றம் செய்யப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று, நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி (KfW), தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் (TNUIFSL) ஆகியவற்றுக்கு இடையேயான திட்ட ஒப்பந்தம் மற்றும் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான தனி ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் பரிமாற்றம் செய்யப்பட்டது.

ஜெர்மன் அரசின் சார்பில் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி 2008 முதல் தமிழ்நாடு அரசுடன் இணைந்து நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி தமிழ்நாடு (SMIF-TN) திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றது. ஜெர்மன் மேம்பாட்டு வங்கி உதவியுடன் நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி தமிழ்நாடு திட்டம், சுற்றுப்புறச் சூழ்நிலையை மேம்படுத்தி இயற்கை வளங்களைப் பாதுகாத்து நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. இத்திட்டம் ரூ.1,969.47 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு நிலைகளைக் கொண்டது. இத்திட்டத்தின் முதல் நிலை டிசம்பர் 2015-லும், இரண்டாவது நிலை பகுதி 1 டிசம்பர் 2021-லும் நிறைவடைந்தன. இத்திட்டத்தின் பகுதி 2 டிசம்பர் 2022-ல் முடிவடையும்.

இதன் தொடர்ச்சியாக, ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் 500 மில்லியன் யூரோ நிதி உதவியுடன் (சுமார் ரூ.4,250 கோடி), மூன்றாம் கட்ட நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி தமிழ்நாடு (SMIF-TN-III) திட்டமானது செயல்படுத்தப்படவுள்ளது.

அதற்காக, ஜெர்மன் மேம்பாட்டு வங்கி மற்றும் இந்திய அரசு இடையே 24.11.2022 அன்று 500 மில்லியன் யூரோ (சுமார் ரூ.4,250 கோடி) கடன் ஒப்பந்தம் புது தில்லியில் கையெழுத்தானது.

அதனைத் தொடர்ந்து, சென்னையில் 2.12.2022 அன்று ஜெர்மன் மேம்பாட்டு வங்கி, தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும், ஜெர்மன் மேம்பாட்டு வங்கி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே தனி ஒப்பந்தமும் கையெழுத்தானது. இவ்விரண்டு ஒப்பந்தங்களும் முதல்வர் முன்னிலையில் இன்று பரிமாற்றம் செய்யப்பட்டது.

நகர்ப்புற உள்கட்டமைப்பில் காலநிலை மீள்தன்மை மற்றும் தழுவலுடன் கூடிய, குறிப்பாக நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் மற்றும் அதன் தொடர்புடைய இடர்களை கையாள்வதற்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திறனை மேம்படுத்துதல் ஆகியவை மூன்றாம் கட்ட நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி தமிழ்நாடு திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் 30.06.2030 அன்று நிறைவுபெறும்.