Udhayanidhi Stalin Become Sports Minsiter: மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் தற்போது 35வது அமைச்சராக சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சக அமைச்சர்களுடன் சென்ற உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக அமைச்சரவை குழு புகைப்படம் எடுத்துக்கொண்டது.

புதியதாக அமைச்சரவையில் இணைந்த உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமாத்துறையினர், தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்னர் அமைச்சர் மெய்யநாதன் கூடுதலாக கவனித்து வந்த விளையாட்டுத்துறைதான் உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.க., உள்ளிட்ட கட்சிகள் வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது.