Teacher Protest: அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடருவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

சென்னை: அரசு தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டதாகவும் மீண்டும் போராட்டம் தொடரும் என்று (Teacher Protest) இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 2009ம் ஆண்டு மே 31ம் தேதி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு வகையான சம்பளமும், அதே ஆண்டு ஜூன் 1ம் தேதி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வேறு மாதிரியான சம்பளமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒரு நாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பாதிப்படைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அனைவருக்கும் சமமான சம்பளம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் 50 பேருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டனர். இருந்தபோதும் தொடர்ந்து போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உண்ணாவிரதத்தில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் கோரிக்கை நிறைவேறவில்லை என்று மீண்டும் போராட்டத்தை தொடருவதாக ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.