Mettupalayam – Coimbatore train: மேட்டுப்பாளையம் – கோவை ரயில் இனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கும்

சென்னை: Mettupalayam – Coimbatore train will now run on Sundays as well. வாரத்திற்கு 6 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்ட மேட்டுப்பாளையம் – கோவை ரயில் இனி தினசரி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகனின் கோரிக்கைக்கு இணங்க, மேட்டுப்பாளையம் – கோவை ரயில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும் என்றும், சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், ரயில்வே துறை அமைச்சகத்திற்கு எழுதியிருந்த கடிதத்தில், தமது தமிழ்நாட்டுப் பயணத்தின் போது ஏராளமான பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், மேட்டுப்பாளையம் – கோவை ரயிலை ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும் என்று தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் ரயிலை இயக்கினால், அந்த மார்க்கத்தில் பயணிக்கும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயனடைவார்கள் என்றும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதில் அளித்து ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டாக்டர் எல் முருகனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இது குறித்து பரிசீலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். வாரத்திற்கு ஆறு நாட்கள் இயக்கப்பட்டு வந்த மேட்டுப்பாளையம் – கோவை ரயில் இனி தினசரி இயக்கப்படும் என்றும், சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் அந்தக் கடிதத்தில் ரயில்வே அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.