Longest bond between Tamil Nadu and Kashi: தமிழகம்-காசி இடையே மிக நீண்ட பந்தம்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

வாரணாசி: Union Minister of State L. Murugan said that there is a very long bond between Tamil Nadu and Kashi. தமிழகத்துக்கும், காசிக்கும் இடையே ஆண்டுகளில் கணக்கிட முடியாத பந்தம் உள்ளது என்றும், தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவை உத்தரப்பிரதேசத்தில் பிரதிபலிக்கிறது என்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.

வாரணாசியில் இன்று நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் கலந்து கொண்டு, வரவேற்புரை ஆற்றிய அவர், புனித பூமியான வாரணாசியில் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்னும் மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார். காசி தமிழ் சங்கமத்தற்கு வருகை தந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடியை வரவேற்ற அவர் காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் ஆண்டுகளில் கணக்கிடமுடியாத மிகப் பெரிய பந்தம் உள்ளதாக குறிப்பிட்டார்.

பாண்டிய மன்னன் அதிவீர ராம பாண்டியன் காசிக்கு புனித யாத்திரை மேற்கொண்டு, தமிழகத்திற்கு திரும்பிய பின் தென்காசியில் பெரிய சிவாலயத்தை நிறுவியதை சுட்டிக்காட்டினார். அதேபோல, காசிக்கும், தமிழகத்திற்கும் இடையிலான உறவை காசிக்காண்டம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் இடையே உள்ள ஆன்மீக யாத்திரையை சுட்டிக்காட்டிய அமைச்சர், தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு உத்தரப்பிரதேசத்தில் பிரதிபலிக்கிறது என்றும், அதைப் பிரதிபலிக்கும் விதத்தில் இந்த விழா நடைபெறுகிறது என்றும் கூறினார். ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ நிகழ்ச்சி பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் இணைப்பு பாலமாக கார்த்திகை மாதம் முழுவதும் நடைபெறவுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். தேசிய கல்விக்கொள்கையை பிரபலப்படுத்தும் வகையிலும், இது இருக்கும் என்று கூறிய அவர், தமிழகத்தில் விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டு, பெண் விடுதலைக்கும் பாடுபட்ட பாரதியாருக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஒரு இருக்கை அளித்து பெருமைப்படுத்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

காசி தமிழ் சங்கமம் விழாவுக்கு சிறப்பான வரவேற்பை வழங்கியுள்ள உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநில ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடாளுமன்ற உறுப்பினர் இளையராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தர் சுதிர் ஜெயின், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உள்ளிட்ட அனைத்து பிரமுகர்களையும் வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.

உத்தரப்பிரசேத்தின் வாரணாசியில் நடைபெறும் ஒருமாத நிகழ்ச்சியான காசி – தமிழ் சங்கமத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கிவைக்கிறார். நவம்பர் 17-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, டிசம்பர் மாதம் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான பண்டைய தொடர்புகளை புதுப்பித்துக் கொள்ளும் விதமாகவும், இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.