Jallikattu On Jan 8 In Thachanchurichi: தச்சங்குறிச்சியில் ஜனவரி 8ம் தேதி ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை (Jallikattu On Jan 8 In Thachanchurichi) அருகே உள்ளது தச்சங்குறிச்சி கிராமம். அங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்ததன் காரணமாக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்காக சென்ற ஆண்டில் ஜனவரி 13ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதங்களாக ஜல்லிக்கட்டு குழுவினர் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம், கால்நடை துறையினரிடம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்திருந்தனர். ஆனால் அரசு சார்பில் அனுமதி கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில், இன்று (ஜனவரி 6) ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு கூறியிருந்த கட்டளைகளை ஏற்று ஜல்லிக்கட்டு நடத்த முன்னேற்பாடுகளை ஜல்லிக்கட்டு குழுவினர் காத்திருந்தனர்.

மேலும் முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு மற்றும் எஸ்.பி. வந்திதா பாண்டே, வருவாய் கோட்டாச்சியர் மற்றும் கால்நடைதுறை அலுவலர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது அரசு விதித்த நடைமுறைகளை சரிவர செய்யாமல் ஜல்லிக்கட்டு குழுவினர் இருந்துள்ளனர். இதனால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என்று ஆட்சியர் கூறினார். வேறு ஏதாவது ஒரு தேதியில் மாற்றிக்கொள்ளவும் கூறினார்.

இதனை கேட்டு பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காளைகளை போட்டி திடலுக்குள் உரிமையாளர்கள் அவிழ்த்து விட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதனை தொடர்ந்து விழா கமிட்டியிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து வருகின்ற ஜனவரி 8ம் தேதி ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறுவதற்கு வருவாய் கோட்டாச்சியர் முருகேசன் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.