Sabarimala Magara Vilakku Pooja: மகரவிளக்கு பூஜைக்குத் தயாராகும் சபரிமலை

கேரளா: மகரவிளக்கு பூஜைகளுக்காக (Sabarimala Magara Vilakku Pooja) கடந்த மாதம் டிசம்பர் 30ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் மகரவிளக்கு பூஜை வருகின்ற ஜனவரி 14ம் தேதி நடைபெற உள்ளது.

மகரவிளக்கு பூஜைக்கான சுத்தி கிரியைகள் வருகின்ற 12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறுகிறது. 12ம் தேதி பிரசாத சுத்தியும், 13ம் தேதி பிம்ப சுத்தி பூஜைகளும் நடைபெற உள்ளது.

மேலும் ஜனவரி 12-ம் தேதி பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரண யாத்திரை புறப்பட்டு வரும் 14ம் தேதி மாலை சபரிமலையை சென்றடைய உள்ளது. அன்றைய மாலை ஐயப்ப சுவாமிக்கு திருவாபரணம் சார்த்தப்பட்டு தீபாராதனை நடத்தப்படும். அந்த நேரத்தில் விண்ணில் மகர நட்சத்திரம் தெரியும். தொடர்ந்து ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சியளிக்கும் மகரவிளக் தரிசனமும் நடைபெறுகிறது. கவடியார் கொட்டாரப் பிரதிநிதி மூலம் கொடுத்தனுப்பிய நெய் சங்கராந்தி பூஜையின்போது ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்.

வருகின்ற 14ம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக இரவு 11.30 மணிவரை திருநடை திறந்திருக்கும். அதனை தொடர்ந்து வருகின்ற 20ம் தேதி காலை ராஜ பிரதிநிதி சபரிமலை சன்னிதானத்தில் சுவாமி தரிசனம் செய்வதை தொடர்ந்து மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைகிறது. இதனால் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மகரவிளக்கு தரிசனத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.