Jallikattu competitions in Chennai: சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த திட்டம்: கமல்ஹாசன்

சென்னை: Plan to hold Jallikattu competitions in Chennai. சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ எனப்படும் இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் ராகுல்காந்தியுடன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பங்கேற்றார். இவருடன் கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நடைபயணத்தில் பங்கேற்ற தனது கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் கமல்ஹாசன் விருந்து வழங்கினார்.

அப்போது பேசிய கமல்ஹாசன், மதத்தை வைத்து அரசியல் செய்து வரும் பாஜகவை நாம் எதிர்க்க வேண்டும். இதற்காகவே காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஒற்றுமை நடை பயணத்தில் பங்கேற்றோம். மதத்திற்கு எதிரான அரசியலை நாம் தடுக்க வேண்டும். இந்திய ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ அமைந்துள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நான் ’ஏ’ சொன்னால் ’ஏ’ சொல்லுங்கள். ’பி’ சொன்னால் ’பி’ சொல்லுங்கள், ’சி’ சொன்னால் ’சி’ சொல்லுங்கள். உங்கள் ஆதரவுடன் மட்டுமே தலைமை பொறுப்பில் உள்ளேன்.

எனவே, தலைமை கட்டளைகளை, உத்தரவுகளை மீறுபவர்கள் மீது பாரா முகத்தோடு இருக்க மாட்டேன். சென்னையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டு உள்ளோம். விரைவில் அதற்கான இடம் தேர்வு செய்து பின்னர் அறிவிக்கப்படும். மெரினாவில் நடத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக உள்ளது. நீங்கள் செய்யும் நல்லது கெட்டது அனைத்தையும் நான் பார்த்துகொண்டு தான் உள்ளேன்.

உங்களுக்கு பஞ்சாயத்து செய்ய என்னிடம் நேரமில்லை. எந்த கட்சியாக இருந்தாலும் மதத்தை வைத்து இங்கு அரசியல் செய்ய முடியாது ஏன் என்றால் இது தமிழ்நாடு. அண்ணா என்பது அவர் பெயர் மட்டும் இல்லை. அது ஒரு உறவு. மக்கள் நம்முடைய நலனில் யார் பேசுகிறார்களோ அவர்கள் பின் செல்வார்கள். அந்த நலனை நான் தேடி கொண்டுள்ளேன். கட்சியை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தி வருகிறோம் எனப் பேசினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், நிர்வாகிகளை நான் சந்தித்து பேசிய ஒரே காரணம் என்னுடைய குரல் கேட்டதும் அனைவரும் ஓடி வந்தார்கள். ஜல்லிக்கட்டை சென்னையில் நடத்த திட்டமிட்டு உள்ளோம். எனவே அதற்கான அனுமதியை பெறுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். சென்னையில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக நடத்திய போராட்டத்தை நான் இன்னும் மறக்கவில்லை. போராட்டம் நடைபெற்ற அதே இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாது. பல சிக்கல் உள்ளது. நகரத்தில் இருப்பவர்களுக்கும் ஜல்லிக்கட்டு புரிய வேண்டும். அதற்காக சென்னையில் நடத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.