pink bus service launched: சென்னையில் பெண்களுக்கான இலவச ‘பிங்க்’ நிற பேருந்து சேவை துவக்கி வைப்பு

சென்னை: Free ‘pink’ bus service for women launched: சென்னையில் பெண்களுக்கான இலவச ‘பிங்க்’ நிற பேருந்துகளை உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னையில் வசிக்கும் மூத்த குடிமகன்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தினை கொண்டுவந்தது. இதனைத்தொாடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ளூர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என தமிழக அறிவித்தது. இந்த திட்டம் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து, பெண்களுக்கான இலவச ‘பிங்க்’ நிற பேருந்துகள் சென்னையில் இன்று முதல் இயக்கப்படுகிறது. பெண்களுக்கான இலவச நகர பேருந்துக்களை அடையாளம் காட்டும் வகையில் ‘பிங்க்’ நிறத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளின் இயக்கத்தை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மகளிர் இலவச பயணத்திற்காக இந்த ஆண்டு 1,600 கோடி ரூபாயை போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. தமிழகத்தில் சாதாரண கட்டண அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி அமலில் இருந்து வருகிறது. ஆனால், அவசரத்தில் சில பெண்கள் சொகுசு பேருந்து அல்லது டீலக்ஸ் பேருந்துகளில் ஏறி விடுகின்றனர். ஆகவே இந்த குழப்பத்தை போக்கும் வகையில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சாதாரண கட்டண பேருந்தின் நிறத்தை ‘பிங்க்’ நிறத்தில் மாற்றம் செய்யும் நடவடிக்கையை மாநில போக்குவரத்து துறை மேற்கொண்டது.

இதனையடுத்து ‘பிங்க்’ நிற பேருந்துகள் இயக்கத்தை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அலுவலகம் அருகே இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மகளிருக்கான இலவச பேருந்து பயணம் தொடங்குவதற்கு முன்பு பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் பெண்கள் 40 விழுக்காடாக இருந்த நிலையில், பேருந்து இலவச பயணம் தொடங்கிய பிறகு 61 விழுக்காடாக பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அண்மையில் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் பேருந்துகளை சுலபமாக அடையாளம் காண வசதியாக ‘பிங்க்’ நிறம் தீட்டப்பட்ட 60 பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடக்கி வைத்தனர்.