Free bus service for students: புதுச்சேரியில் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை

புதுச்சேரி: Free bus service for school and college students has been started in Puducherry and Karaikal. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரி கல்வித்துறை சார்பில் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு சென்று படித்துவரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக ரூ.1க்கு சிறப்பு பேருந்து சேவை இயக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த காலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கிராமப்புற மாணவர்களுக்கான 1 ரூபாய் சிறப்பு பேருந்து, 2 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இலவச பேருந்தாக மாற்றப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து சேவையை ஏ.எப்.டி மைதானத்தில் இருந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 74 பேருந்துகள் மாணவர்களின் பயன்பாட்டுக்காக இயக்கப்படுகிறது. இதில் 17 பேருந்துகள் காரைக்காலில் இயக்கப்படுகிறது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா, ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு என தனித் தனியாக பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் மாணவர்களுக்கு மதிய உணவுடன் வழங்கப்பட்டு வந்த முட்டை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மீண்டும் வழங்கப்படும். வாரத்தில் 2 முட்டைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 3 முட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது நிலுவையில் உள்ள இலவச சீருடை, இலவச மடிக்கணினி, சைக்கிள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.