AIADMK won’t even last 100 days: அதிமுக இனி 100 நாள் கூட இருக்காது: ஜெ.தீபா பரபரப்பு பேட்டி

சென்னை: Jayalalithaa’s niece J. Deepa has said that the AIADMK party will not exist for even 100 days. அதிமுக கட்சி இனி 100 நாட்கள் கூட இருக்காது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் நினைவிடம் நோக்கி பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினார்.

அப்போது ஜெயலலிதாதான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என்ற நிலையை மீண்டும் உருவாக்க நாம் அனைவரும் சூளுரைப்போம் என ஓ.பி.எஸ். அணியினர் உறுதிமொழி ஏற்றனர். மேலும் கட்சித் தொண்டர்களும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் அவரின் அண்ணன் மகள் ஜெ.தீபா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா, ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளிலேயே சர்ச்சை இருப்பதாகவும், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைக்கு எந்தவித தீர்வுமே இல்லாமல் உள்ளதாகவும். அடுத்த கட்ட நடவடிக்கையும் இப்போதுள்ள அரசாங்கமே எடுக்கவில்லை என தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் மேற்கொண்டு விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து அதிமுக 4 அணியாக உள்ளது குறித்து கூறுகையில், 4 அணிகளுமே கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள் எனவும், எடப்பாடி பழனிசாமியை கூறவில்லை; சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை கூறுகிறேன் எனக் கூறினார்.

மேலும் கட்சி குறித்து கேட்டபோது, அதிமுக கட்சி இனி 100 நாட்கள் கூட இருக்காது என நினைக்கிறேன். வரும் 2024ல் தேர்தலின்போது அது தெரிந்துவிடும் என தெரிவித்தார்.

ஜெ.தீபாவின் இந்த பேட்டி அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.