கோவை: Flooding at Coimbatore Monkey Falls. பொள்ளாச்சி சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முக்கிய அணைகளான சோலையாறு, ஆழியாறு,பரம்பிக்குளம் அணைகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளன.
கோவை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருதால், ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வினாடிக்கு 1,100 கனஅடி நீர் வந்துகொண்டுள்ளது. இதனையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து வினாடிக்கு 1,100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை தொடருவதால் அணைக்கு வரும் நீர்வரத்தை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் குரங்கு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கப்படவில்லை. தொடர்ந்து வரும் நீர்வரத்தை பொறுத்து சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர நிலவரப்படி பெய்த மழைஅளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு: சோலையார் 77, பரம்பிக்குளம் 37, ஆழியாறு 48, திருமூர்த்தி 17, வால்பாறை 29, மேல்நீராறு 33, கீழ்நீராறு 24, காடம்பாறை 31, சர்க்கார்பதி 83, வேட்டைக்காரன்புதூர் 62.6, தூணக்கடவு 56, பெருவாரிபள்ளம் 38, அப்பர் ஆழியாறு 6, பொள்ளாச்சி 17, நல்லாறு 12.
குரங்கு அருவி, ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் வழியில் 5 கி.மீ தொலைவில் உள்ளது. குடும்பத்தோடு அருவிக் குளிக்க சிறந்த இடம். இங்கேயே மதியம் சாப்பிட்ட உடனேயே புறப்பட்டால் 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலைப் பாதையை கடந்து 4 மணிக்குள் வால்பாறை எட்டி விடலாம். பொள்ளாச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. கோவையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்திராகாந்தி வன உயிரினக் கோட்டம், மேல் ஆழியாறு பகுதியில் குரங்கு அருவி அமைந்துள்ளது.



