Fire at Neyveli NLC: நெய்வேலி என்எல்சியில் பயங்கர தீ விபத்து; ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்

நெய்வேலி: A terrible fire broke out at Neyveli NLC New Thermal Power Station. நெய்வேலி என்எல்சி புதிய அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அனல்மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்நிறுவனம் நெய்வேலி பகுதியில் 3 சுரங்கங்களை அமைத்து பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்து மின் உற்பத்தி செய்து தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மின் விநியோகம் செய்து வருகிறது.

அண்மையில் நெய்வேலி புதிய அனல் மின் நிலையம் கட்டமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பங்கரில் பழுப்பு நிலக்கரியை ஏற்றும்போது தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலம் ஒரு நிரந்தர தொழிலாளி உள்ளிட்ட நான்கு இன்க்கோசர் ஒப்பந்த தொழிலாளர்கள் தீக்காயம் அடைந்தனர். காயமடைந்த 5 பேரும் மீட்கப்பட்டு என்எல்சி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்க பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நெய்வேலி என்.எல்.சி புதிய அனல் மின் நிலையத்தின் இரண்டாவது அலகில் இன்று பிற்பகல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் திருநாவுக்கரசு என்ற தொழிலாளி உயிரிழந்தார்; 4 தொழிலாளிகள் படுகாயமடைந்தனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். திருநாவுக்கரசு மறைவுக்கு எனது இரங்கல்.

காயமடைந்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செல்வராஜ், சுரேஷ், தட்சிணாமூர்த்தி, செந்தில்குமார் ஆகியோருக்கு தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் விரைந்து குணமடைய வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்.எல்.சியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிகழும் மூன்றாவது பாய்லர் விபத்து இதுவாகும். என்.எல்.சியில் தொழிலாளர்களின் உயிருக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. விபத்து குறித்து விசாரணை நடத்துவதுடன், இனி இத்தகைய விபத்து நடக்காமல் தடுக்க வேண்டும்.

விபத்தில் உயிரிழந்த திருநாவுக்கரசு குடும்பத்திற்கு என்.எல்.சி ரூ 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்த தொழிலாளர்களில் உடல் முடக்கம் அடைந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் வீதமும், மற்றவர்களுக்கு ரூ.25 லட்சம் வீதமும் இழப்பீடு வழங்க வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.