ban on Kollimalai waterfalls: கனமழை எதிரொலி: கொல்லிமலை அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு

நாமக்கல்: Extension of ban on bathing in Kollimalai waterfalls: கொல்லிமலையில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை மிகச்சிறந்த இயற்கை சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1330 மீட்டர் உயரத்தில் இந்த மலை அமைந்துள்ளது. ஆடி மாதத்தில் இங்கு தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா நடத்தப்படும். இந்த ஆண்டும் ஓரி விழா கடந்த 3ம் தேதி நிறைவு பெற்றது. ஆடி மாத சீசனை அனுபவிப்பதற்காகவும், இங்கு விளையும் பலாப்பழம், அண்ணாசி, மலைவாழை மற்றும் மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆடி மாதத்தில் கொல்லிமலைக்கு வருவார்கள். இந்த ஆண்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொல்லிமலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் அங்குள்ள அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஆங்காங்கே திடீர் நீர்வீழ்ச்சிகளும் உருவாகி உள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி போன்ற அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேல் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதனால் கொல்லிமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தால் மட்டுமே அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுற்றுலாத்தளங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்:
ஆகாய கங்கை அருவி: கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்த அருவியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது.
அறப்பளீஸ்வரர் கோவில்: சதுரகிரி எனும் மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார். இங்குள்ள ஈசன் ‘அறப்பள்ள மகாதேவன்’, ‘அறப்பளி உடையார்’ என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

முருகன் கோவில்: அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேட்டுவர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சிவன், பார்வதி, விஷ்ணு, இடும்பன் மற்றும் விநாயகருக்கும் இங்கு ஆலயங்கள் உள்ளன.

மாசி பொியசாமி கோவில்: கொல்லி மலையின் ஒரு மலை உச்சியில் பொியசாமிக்கு என்று ஒரு கோவில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது. கோவிலுக்கு செல்ல முறையான படிக்கட்டு வசதிகள் இல்லை. மாசி மாதத்தில் மிக விமாிசையாக திருவிழா கொண்டாடப்படுகின்றது.

படகு சவாரி: தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும்.
வல்வில் ஓரி பண்டிகை: ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரியின் நினைவாக ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது.

போக்குவரத்து: நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும்.

சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர். 2 அல்லது 3 கொண்டை ஊசி வளைவுகளுடன் அபாயமற்ற மாற்று மலைப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.