Erode East by Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 80 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

ஈரோடு: It has been announced that the nomination papers of 80 people have been accepted in the Erode East constituency by-election. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 80 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ம் தேதி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு, வரும் பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னரசு உள்ளிட்ட 37 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. மொத்தமாக 121 வேட்பாளர்கள் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 80 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. காங்கிரசின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவின் தென்னரசு, தேமுதிகவின் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா உள்ளிட்ட 80 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மேலும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் முருகன் உள்ளிட்ட 41 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.