Repo rate hike for banks: வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: கடன் வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு

புதுடெல்லி: RBI Governor Shaktikanta Das has announced an increase in the repo interest rate for banks by 0.25%. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த வட்டி உயர்வால் தனி நபர், வீடு , வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கடந்த பிப்ரவரி 1ம் தேதியன்று மத்திய அரசின் 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி தனது நாணயக் கொள்கைக் குழுவின் (எம்.பி.சி) 3 நாள் கூட்டத்தை பிப்ரவரி 6ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்துள்ளார். அதன்படி வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 6. 5% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ரெப்போ வட்டி விகிதத்தை 6வது முறையாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 4 சதவிகிதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது 6.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ரெப்போ வட்டி விகித உயர்வினால், வீடு, வாகன கடன்களுக்கான வட்டி உயர வாய்ப்பு உள்ளது.

ரெப்போ விகிதம் என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கி, மற்ற வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதம் ஆகும். இந்திய ரிசர்வ் வங்கி பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்த ரெப்போ விகிதத்தைப் பயன்படுத்துகிறது. மக்களிடம் பண புழக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டில் பொருளாதார மந்தநிலையை சரி செய்வதே இதன் நோக்கமாகும்.

நாடு முடுவதும் ஏற்கெனவே சில்லறை பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்க உயர் சகிப்புத்தன்மையும் 6 சதவீத உச்ச நிலையை எட்டியுள்ளது. இதற்கு மேல் பண வீக்கம் ஏற்பட்டால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும்.