Electric auto connectivity service: சென்னை மெட்ரோவில் எலக்ட்ரிக் ஆட்டோ இணைப்பு சேவை துவக்கம்

சென்னை: Electric auto connectivity service launched in Chennai Metro. சென்னை மெட்ரோ ரயிலின் இணைப்பு சேவையாக எலக்ட்ரிக் ஆட்டோ துவங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோவில் மின்னியங்கி மூன்று சக்கர வாகன இணைப்பு சேவையை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் துவக்கிவைத்தார்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பயணிகள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களிலிருந்து தங்கள் பணியிடங்களுக்குச் செல்வதற்கான பல்வேறு இணைப்பு வாகன வசதிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றது.

இந்த இணைப்பு சேவை வசதிகளில் தற்போது சிற்றுந்து சேவை மெட்ரோ இரயில் பயணிகளுக்காக பல்வேறு மெட்ரோ இரயில் நிலையங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும், கூடுதலாக எம்.ஆட்டோ பிரைடு (LEGGO) என்ற மின்னியங்கி மூன்று சக்கர வாகன இணைப்பு சேவையை நேற்று அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்கள் துவக்கி வைத்தார்.

பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) ராஜேஷ்சதுர்வேதி, எம்.ஆட்டோ குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் மன்சூர் அல் புஹாரி, சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலக் குழுத் தலைவர் என். சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எம்.ஆட்டோ பிரைட் (LEGGO) முழுமையாக மின் சக்தியில் இயங்கும் முதல் மூன்று சக்கர வாகனமாகும். இதனை செயலி மூலம் பயன்படுத்தி, மின்னணு முறையில் பணத்தைச் செலுத்தலாம் மற்றும் நேரடியாகவும் பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம். துவக்க சலுகையாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.12 என்ற கட்டணத்தில், இந்த சேவை முதற்கட்டமாக அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணைப்பு சேவை வசதியை மெட்ரோ பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.