Crop Insurance at E-sewa center: இன்றும் நாளையும் இசேவை மையங்களில் பயிர்காப்பீடு செய்ய ஏற்பாடு

சென்னை: Arrangements are made for crop insurance today and tomorrow at these service centers. நடப்பு 2022-2023 ஆம் ஆண்டில், சம்பா நெற்பயிரை பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய ஏதுவாக இன்றும் நாளையும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இயங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பருவ மழை காலங்களில் வெள்ளம், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாய பெருங்குடி மக்கள் பாதித்திடும் பொழுது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் பாதுகாத்திடும் வகையில், 2022 – 2023 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு மாநில அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்பட்ட போதிலும் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 12.26 இலட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு சுமார் 22 இலட்சம் விவசாயிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் சம்பா நெற்பயிருக்கான காப்பீடு தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாருர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை , திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை , கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 15 அன்று முடிவடைவதால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முழுவீச்சில் இயங்கிட வேளாண்மை – உழவர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே, சனி (12.11.2022) மற்றும் ஞாயிற்றுகிழமையில் (13.11.2022) பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் செயல்படுவதால் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் நவம்பர் 15ம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயனடையுமாறு வேளாண்மை – உழவர் நலத்துறை கேட்டுக் கொள்கிறது.