Couple Committed Suicide: சேலத்தில் அதிர்ச்சி: 2 மகளையும் காவிரி ஆற்றில் வீசி கொன்று தம்பதி தற்கொலை

சேலம்: கூலித்தொழிலாளர்களான (Couple Committed Suicide) யுவராஜ் 42, மனைவி மான்விழி 35, இவர்களின் இரண்டு மகள்களுடன் காவிரி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், தாதகாப்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ் 42, இவரது மனைவி மான்விழி 35, இந்த தம்பதிக்கு நிதிஷா என்கின்ற நேகா 7, அஷரா 5 என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில், மூத்த மகள் நிதிஷாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து தினந்தோறும் நிதிஷாவுக்கு இன்சுலின் ஊசி செலுத்தியுள்ளனர். இதன் பின்னர் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் இரண்டாவது மகள் அஷராவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அஷராவை, அவரது தந்தை யுவராஜ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அதில் அவர்கள் இரண்டு பேருக்கும் சர்க்கரை நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை கேள்விப்பட்டு அவர் மனம் நொந்து போயுள்ளார்.

இதன் பின்னர் வீட்டுக்கு சென்ற யுவராஜ் தனது மனைவி மான்விழியிடம் இரண்டாவது மகளுக்கும் சர்க்கரை நோய் இருப்பதை கூறியுள்ளார். இதனை கேட்ட மான்விழி அதிர்ச்சியில் உறைந்துள்ளார். பின்னர் கணவன், மனைவி இருவரும் தங்களது குழந்தைகளை கொன்றுவிட்டு தாங்களும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் மகள்களை கொன்றுவிட்டு தாங்களும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவராஜ் மற்றும் அவரது மனைவி மான்விழி, அவரின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மேட்டூர் அருகே கொளத்தூர், கர்நாடக தமிழக எல்லையில் உள்ள சின்ன காவல் மாரியம்மன் காவிரி ஆற்றின் நீர்தேக்க பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு மிகுந்த மனவேதனையுடன் தனது இரண்டு மகள்களையும் காவிரி ஆற்றில் வீசியுள்ளார். இதில் அவர்கள் தண்ணீரில் கதறியபடியே மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் பின்னர் யுவராஜ் மற்றும் மான்விழி இருவரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. இன்றும் பல வியாதிகளுக்கு மருந்து கண்டுப்பிடிக்கப்படாததால் பலர் இது போன்ற விபரிதமான முடிவை எடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்கொலை என்பது எப்போதும் தீர்வை தராது.