Contract Nurses Protest: கொரோனா கவச உடை அணிந்து ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று சமயத்தில் (Contract Nurses Protest) அரசு மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியர்கள் சுகாதாரத்துறை மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர்க்கப்பட்டனர். இதனிடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர்களின் ஒப்பந்த காலம் முடிவுற்றதாக அரசு அறிவித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த செவிலியர்கள் சென்னையில் முகாமிட்டு போராடி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களிலும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே செவிலியர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தலைமை செயலகத்தை இன்று முற்றுகையிடும் போராட்டத்தை ஒப்பந்த செவிலியர்கள் அறிவித்திருந்தனர். இதற்காக அனைத்து செவிலியர்களும் எழும்பூரில் அணி திரண்டனர். அப்போது போராட்டத்தில் பங்கேற்ற செவிலியர்கள் கொரோனா கவச உடை அணிந்து தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.