CM Basavaraj Bommai : நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு உறுதுணையாக‌ அரசு இருக்கும்: முதல்வர் பசவராஜ் பொம்மை

மைசூர்: CM Basavaraj Bommai : மாநிலத்தின் பல பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் இந்த நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு உறுதுணையாக‌ அரசு இருக்கும். அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தி நிவாரணப் பணிகளில் மாவட்டப் பொறுப்பு அமைச்சர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

மைசூரு விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் அனைவரும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உடுப்பியில் அமைச்சர் எஸ் அங்காரா, மங்களூரில் சுனில்குமார், உத்தர கன்னடத்தில் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி, மைசூருவில் எஸ்டி சோமசேகர் ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ஏற்கனவே சென்று நிலைமையை ஆய்வு செய்துள்ளனர். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக் குடகுக்கு சென்றுவிட்டு திரும்பினார்.

அரசு முழுமையாக‌ இதில் ஈடுபட்டுள்ளது. நானும் இன்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவேன், நில நடுக்கம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் முயற்சி நடந்து வருகிறது. நில நடுக்கம் பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இடைவிடாத மழை காரணமாக பல இடங்களில் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது, குடகில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு மற்றும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, கடல் அரிப்பு காரணமாக கடலோர பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், வட கர்நாடகாவின் பல பகுதிகளில் ஆற்றங்கரையோரங்களில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளன.

சில இடங்களில் நீர்த்தேக்கங்களில் இருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டதால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சரியான விவரங்கள் விரைவில் பகிரப்படும். தேசிய பேரிடர் மீட்பு நிதி ரூ.7 30 கோடி உள்ளது. நிதிப் பற்றாக்குறை இல்லை. இழப்புகளை மதிப்பிட்டு தேவைப்பட்டால் மத்திய உதவி கோரப்படும்.

பல கிராமங்களில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோரம் உள்ள 63 வெள்ள அபாய கிராமங்களிலிருந்து மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆனால் சில கிராமங்களில் மக்கள் இடம்பெயர தயக்கம் காட்டுகின்றனர். அத்தகைய கிராமங்களை பாதுகாப்பான இடமாற்றம் செய்வது குறித்து நிபுணர்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறப்பு திட்டம் வகுக்கப்படும் என்றார்.

பின்னர் அவர் மடிகேரிய மல்லிகார்ஜுனா லேஅவுட் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட வீட்டைப் சென்று பார்வையிட்டார். சேதமடைந்த வீட்டின் உரிமையாளர் கோபால் என்பவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் ரூ.1.05 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.அப்போது அவருடன் அமைச்சர் ஆர் அசோக், பி.சி நாகேஷ் உடனிருந்தனர்.