Boats damaged in Rameswaram: ராமேஸ்வரத்தில் வீசிய சூறாவளிக் காற்றால் படகுகள் சேதம்

ராமேஸ்வரம்: Boats damaged by cyclone in Rameswaram. ராமேஸ்வரத்தில் சூறாவளிக் காற்று வீசியதால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேடைந்தன.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இங்கு வட கிழக்கு பருவமழையின் காரணமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சூறாவளிப் புயல் மற்றும் காற்றால் ஆண்டுதோறும் ஏராளமான படகுகள் சேதமடைந்து வருகின்றன.

இதனால் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் வகையில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்க வேண்டும் என மீனவ சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன.

இந்நிலையில், இன்று அதிகாலையில் வீசிய சூறாவளி காற்று காரணமாக சுமார் ஜோஸ்வா, கென்னடி, அந்தோணிராஜ், கிருபை, இன்ரைசன், சவரிமுத்து ஆகியோரின் விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதியதால் 7 விசைப்படகுகள் சேதமடைந்தன. இந்த சூறாவளி காற்றால் சேதமடைந்த படகுகளை சரி செய்ய குறைந்தபட்சமாக ரூ.50,000 முதல் 2 லட்சம் வரை செலவாகும் என மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து மீனவ சங்கத் தலைவர் சகாயம் கூறுகையில், ராமேஸ்வரம் மீன் பிடிதொழில் சுமார் 5000 மீனவர்களுடைய குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் சூறாவளி காற்றால் படகுகள் சேதமடைந்து பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே மத்திய, மாநில அரசு ராமேஸ்வரத்தில் தூண்டில் வளைவு துறைமுகத்தை அமைத்து தரவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் சேதமடைந்த படகுகளுக்கு அரசு இழப்பீடு வழங்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.