BJP state vice president KP Ramalingam arrested: பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது

நாமக்கல்: BJP state vice president KP Ramalingam arrested: ராசிபுரத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் கடந்த 11ம் தேதி, நடந்த 75 ஆவது சுதந்திர தினம் அமுத பெருவிழா பாதயாத்திரையை பாஜக மாவட்டத் தலைவர் பாஸ்கர் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் வரை சுதந்திர தின விழாவை முன்னிட்டு பலர் கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக வந்து சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைந்துள்ள பாரதமாதா நினைவாலயத்தில் மாலை அணிவிக்க வந்தனர். அப்போது பாரதமாதா நினைவாலயத்தின் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, அங்கு பணியாற்றும் நினைவிட கண்காணிப்பாளரிடம் கதவை திறக்கும்படி வலியுறுத்தியுள்ளனர். இது மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அந்த துறையை சேர்ந்த அதிகாரிகளை கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து செய்தி மக்கள் அதிகாரியிடம் கண்காணிப்பாளர் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு அங்கு யாருக்கும் அனுமதியில்லை என கூறியதால் பாஜகவினர் ஆத்திரமடைந்து பாரதமாதா நினைவாலயத்தின் பூட்டை கல்லால் உடைத்து பாரதமாதா சிலைக்கு மாலை அணிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பாரதமாதா நினைவாலையத்தின் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்ததாக பாஜக மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான கே.பி.ராமலிங்கம் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தர்மபுரி காவல் துறையினர் மற்றும் ராசிபுரம் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்தை கைது செய்தனர்.

டாக்டர் கே. பி. ராமலிங்கம் கடந்த 2010ம் ஆண்டில் மாநிலங்களவை எம்பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். கடந்த 1980 மற்றும் 1984 தேர்தல்களில் இராசிபுரம் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் திமுகவில் இணைந்த அவர் 1996 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திருச்செங்கோடு தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இதனைத்தொடர்ந்து அக்கட்சியிலிருந்து விலகி பாஜக.,வில் சேர்ந்தார். தற்போது மாநில பாஜக துணைத்தலைவராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.