Bharathi’s biography: அனைத்து மொழிகளிலும் பாரதியின் வாழ்கை வரலாறு: துணைவேந்தர் குர்மீத் சிங்

புதுச்சேரி: Bharathi’s biography should be translated in all Indian languages: Vice Chancellor Gurmeet Singh. அனைத்து இந்திய மொழிகளிலும் பாரதியின் வாழ்க்கை வரலாறு மொழிபெயர்க்கப்படவேண்டும் என புதுவை பல்கலை., துணைவேந்தர் குர்மீத் சிங் தெரிவித்துள்ளார்.

புதுவைப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழ்மொழி மற்றும் இலக்கியப்புலம் சார்பாக, பாரதியின் நூற்றியோராவது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், 1944ஆம் ஆண்டு வ.ரா. எழுதிய மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாற்று நூல், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அம்ஷன்குமார் மொழிபெயர்ப்பில் ‘சுப்பிரமணிய பாரதி : ஏ பயோகிராபி பை வ.ரா.’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது.

புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங் நூலை வெளியிட, கலையியல் புலமுதன்மையர் கிளமண்ட் ச.லூர்து முதல் படியினைப் பெற்றுக் கொண்டார். ஆங்கிலத்துறைத் தலைவர் த.மார்க்ஸ் நூல் குறித்த அறிமுகவுரையை ஆற்றினார்.

சிறப்புரை ஆற்றிய துணைவேந்தர் குர்மீத் சிங், “இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டவர்களுள் சுப்பிரமணிய பாரதியார் முதன்மையானவர். தொழில்நுட்பம் வளர்ச்சிப் பெறாத அன்றைய காலகட்டத்திலேயே, எழுத்தை ஆயுதமாக்கியவர் மகாகவி பாரதி; தன் பாடல்களால் இளைஞர்களின் குருதியில் புரட்சியின் கீதத்தைப் பாடியவர்; தமிழ், தெலுங்கு, பிரெஞ்சு, வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் புலமைமிக்கவர். அப்படிப்பட்ட பாரதியின் நூல் இன்று ஆங்கிலத்தில் வெளிவருவது ஒரு வரலாற்று நிகழ்வு. இதற்காக இந்த நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆவணப்பட இயக்குநரும் எழுத்தாளருமான அம்ஷன்குமாரை மனதாரப் பாராட்டுகிறேன். வ.ரா. எழுதிய பாரதியின் வாழ்க்கை வரலாறு பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படவேண்டும்” என்று கூறினார்.

மொழிபெயர்ப்பாளர் அம்ஷன்குமார் உரையாற்றுகையில், ஆங்கில வழிக் கல்வியை மிகக் கடுமையாக எதிர்த்த போதிலும், பாரதி பல்வேறு ஆங்கிலக் கவிஞர்களை ஆழமாகக் கற்றவராவார். ஷெல்லியை உணர்ந்த அவர். தன் பெயரையே ஷெல்லிதாசன் எனப் புனைபெயராக்கிக் கொண்டவர். ஆங்கிலத்தின் மீது கடுமையான விமர்சனம் இருந்தாலும், நம்மாழ்வாரின் பாடல்கள் உட்படப் பல்வேறு கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் பாரதியார். வ.ரா.வின் பாரதியின் வாழ்க்கை வரலாற்று நூல், நடுநிலைத் தன்மையுடன் எழுதப்பட்டது. தமிழ் கூறும் நல்லுலகம் இந்த நூலுக்கு ஆதரவு நல்குமென எதிர்பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.

விழாவில் பாரதியின் இறைக் கோட்பாடு என்னும் தலைப்பில் பேரா.நா.இளங்கோ உரையாற்றினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் பா.ரவிக்குமார் ஒருங்கிணைத்தார். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், முதுகலை மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டதாக பல்கலைக்கழகத்தின் உதவிப்பதிவாளர் கி.மகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.