Arrangement for Karthigai Deepam: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திற்கு ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலை: Arrangement for Karthigai Deepam in Thiruvannamalai. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி நவம்பர் மாதம் 27-ந் தேதி நடக்கிறது. டிசம்பர் 6-ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் மகா தீபத்தன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

இவ்விழா 16 நாட்கள் நடைபெறும். இதில் 7-ம் நாள் விழாவின் போது தேரோட்டம் நடைபெறும். தீபத்திற்கு பிறகு அதாவது தீபத்திற்கு மறுநாள் அண்ணாமலையார் பஞ்ச மூர்த்திகளுடன் கிரிவலம் வருவது மிக சிறப்பாகும். அன்று ஏராளமான பக்தர்கள் சுவாமியுடன் கிரிவலம் வருவர்.

கொரோனா ஊரடங்கு காரணத்தினால் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டு அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகள் அனைத்தும் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் கார்த்திகை தீபத் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும் என பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியில் ராஜகோபுரம் எதிரே நிறுத்தப்பட்டுள்ள பஞ்சமூர்த்திகள் தேர்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலில் முருகர் தேரை தொடர்ந்து விநாயகர், அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்கள் சீரமைக்கும் பணிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளது.

அதேபோல் சுவாமி திருவிதிஉலாக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் சீரமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கோயில் பிரகாரங்கள் மதில் சுவர்கள் தினமும் காலை மாலை இரு வேலைகளிலும் சுவாமி புறப்பாடு நடைபெறும், அலங்கார மண்டபம், கொடி மரங்கள் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து மின்சார வயர்கள் , குடிநீர் குழாய்கள் , அனைத்தும் பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாட வீதிகளில் சாலைகளை சீரமைக்கும் பணி, கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் ஆகிய நான் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலையில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஆசிரமங்களில் பக்தர்கள் தீபத் திருவிழாவை காண தற்போது அறைகளை முன் பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.

தீபத் திருவிழாவின் பத்தாவது நாள் அதாவது தீப திருவிழா அன்று மட்டும் கூடுதல் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற நாட்களிலும் தீபம் 10 நாட்களிலும் சிறிது கூடுதலாக சிறப்பு பேருந்துகள் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.