Appointed as Breakfast Program Coordinating Officer: முதல்வரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் நியமனம்

சென்னை: Appointed as Breakfast Program Coordinating Officer: முதல்வரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத்தை நியமித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இந்த திட்டத்திற்காக முதற்கட்டமாக நடப்பு கல்வியாண்டிற்கான ரூ.33.56 கடந்த மே 7ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக இத்திட்டம் சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் முதல்வரின் காலை உணவுத்திட்டம் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது. அரசாணையில், அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 110 விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள ஆயிரத்து 545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 095 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்த நிதி ஒப்பளிப்பு செய்து தமிழக அரசு ஆணையிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்காக சென்னையில் 36 பள்ளிகளும் திருச்சியில் 40, காஞ்சிபுரத்தில் 20, கடலூரில் 15, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 21, வேலூரில் 48, தூத்துக்குடியில் 8, மதுரையில் 26, சேலத்தில் 54, திண்டுக்கலில் 14, திருநெல்வேலியில் 22, ஈரோட்டில் 26, கன்னியாகுமரியில் 19, கோயம்புத்தூரில் 62 பள்ளிகளும் என மாநகராட்சிகளில் 381 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இளம்பகவத்தை நியமனம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. திட்டத்துக்கான பள்ளிகள், பயனாளிகள், ஒருங்கிணைப்பு மையங்கள், செயல்படுத்தும் அமைப்புகள் ஆகியவற்றை துரிதமாக கண்டறிதல், மூலப்பொருட்கள் கொள்முதல், உள்ளூர் காய்கறிகள் கொள்முதலை மேற்கொள்ளுதல், பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைத்தல், ஒட்டுமொத்த செயல்பாடுகளை கண்காணித்தல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பு அலுவலர் மேற்கொள்வார். ஆயிரத்து 545 அரசுப்பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 095 குழந்தைகளுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.