Annadana program launched: ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை கோவில்களில் அன்னதான திட்டம் துவக்கம்

சென்னை: The Chief Minister launched the Annadana program at Rameswaram, Thiruvannamalai and Madurai temples. ராமேஸ்வரம், திருவண்ணாமலை மற்றும் மதுரை கோவில்களில் அன்னதான திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இராமேசுவரம் – அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை- அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைக் காணொலிக் காட்சி வாயிலாக இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இறையருள் பெறத் திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதானத் திட்டமாகும். தற்போது இத்திட்டத்தில் 754 திருக்கோயில்களில் மதியவேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.

அத்திட்டத்தினை விரிவுப்படுத்திடும் வகையில் கடந்த 16.09.2021 அன்று திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

2022 – 23 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, “நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே ஐந்து திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது. இத்திட்டமானது தற்போது விரிவுபடுத்தப்பட்டு இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் மற்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது.

அதன்படி மேற்குறிப்பிட்ட மூன்று திருக்கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை அன்னதானம் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் இம்மூன்று திருக்கோயில்களில் நாளொன்றுக்கு சுமார் 8 ஆயிரம் பக்தர்கள் அன்னதானம் பெற்று பயனடைவார்கள்.

திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் உணவு தர பாதுகாப்புச் சான்றிதழ் அனைத்து முதுநிலை திருக்கோயில்கள் உட்பட 314 திருக்கோயில்களுக்கு பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.