Advanced Light Helicopter Mk-III: இந்திய கடலோர காவல்படையில் நவீன இலகுரக ஹெலிகாப்டர் வசதியுடன் கூடிய புதிய படைப்பிரிவு

சென்னை: Indian Coast Guard Advanced Light Helicopter Mk-III squadron, 840 Sqn (CG), commissioned in Chennai. இந்திய கடலோர காவல்படையின் சென்னை பிராந்தியத்தில் நவீன இலகுரக ஹெலிகாப்டர் வசதியுடன் கூடிய புதிய படைப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்தியத்தில் ரோந்துப்பணியை வலுப்படுத்துவதற்கான பெரும் ஊக்குவிப்பாக புதிய இலகுரக நவீன ஹெலிகாப்டர் வசதியுடன் கூடிய 840 என்ற புதிய படைப்பிரிவை கடலோர காவல்படை தலைமை இயக்குனர் வி.எஸ்.பதானியாதொடங்கிவைத்தார்.

ஹெலிகாப்டர் உற்பத்தியில் தற்சார்பு நிலையை எட்டும் வகையில் மத்திய அரசின் தற்சார்பு இந்தியா என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்த இலகு ரக ஹெலிகாப்டர் எம்கே3, இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய படைப்பிரிவு தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையின் திறன்களை மேம்படுத்தும்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏஎல்எச் எம்கே-III என்ற இலகு ரக ஹெலிகாப்டர்கள், மேம்பட்ட ரேடார் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் சென்சார்கள், சக்தி வாய்ந்த என்ஜின்கள், முழுமையான கண்ணாடி காக்பிட், உயர்-தீவிர தேடல் விளக்கு ஆகியவற்றின் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தகவல் தொடர்பு உபகரணங்கள், தானியங்கி அடையாள அமைப்பு, தேடல் மற்றும் மீட்பு ஹோமர் போன்ற அதிநவீன உபகரணங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இது ஹெலிகாப்டரை கடல்சார் உளவுப் பணிகளை மேற்கொள்வதற்கும், கப்பல்களில் இருந்து இரவும் பகலும் இயங்கும் வகையில் நீண்ட தொலைவில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் உதவும்.

கனரக இயந்திர துப்பாக்கிகளை கொண்ட போர் விமானத்தில் இருந்து தேவைப்படும் போது, அபாய கட்டத்தில் உள்ள நோயாளிகளை தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவு வசதி மூலம் வேறு இடங்களுக்கு மாற்றும் மருத்துவ விமானமாகவும் இது செயல்படும்.

கடலோரக் காவல்படையில் மொத்தம் 16 ஏஎல்எச் எம்கே-III ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு விமானங்கள் சென்னையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஹெலிகாப்டர் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, 430 மணி நேரத்திற்கும் மேலாக பறந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.