2500 people are allowed to climb:திருவண்ணாமலை தீபத்திற்கு மலையேற 2,500 நபர்களுக்கு மட்டுமே அனுமதி

திருவண்ணாமலை: Only 2,500 people are allowed to climb the hill on Tiruvannamalai Karthigai Deepam. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று மலையேற 2,500 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு ஆட்சியர் முருகேஷ் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய ஆட்சியர், கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையை, 14 மண்டலங்கலாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் நடைபெறும் அனைத்து பணிகளையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்பார்வை செய்ய வேண்டும். குடிநீர் வசதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்றும் கண்காணிக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே, அன்னதானம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். கிரிவலப்பாதையில் தூய்மைப்பணி, குடிநீர், கழிவறை மற்றும் அன்னதானம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்.

கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளை, தூய்மையாக பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும். கழிவறைகளுக்கு தேவைப்படும் தண்ணீர் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட வேண்டும். குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். கிரிவலப்பாதையில் உள்ள குப்பை தொட்டிகள் நிரம்பினால், உடனடியாக அதில் உள்ள குப்பைகளை தனியாக எடுத்து அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வைத்துவிட வேண்டும்.

கார் பார்க்கிங் பகுதி மற்றும் தற்காலிக கார் பார்க்கிங் பகுதிகளில் நெரிசல் இல்லாமல் கார்கள் நிறுத்தி வைக்க வேண்டும். தற்காலிக பஸ் நிலையத்தில் நெரிசல் இல்லாமல் பஸ் நிறுத்தம் செய்ய வேண்டும். தற்காலிக பஸ் நிலையத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். பஸ் நிலையங்களில் சட்டம், ஒழுங்கு பராமரிப்பும், அடிப்படை வசதிகளும் உரியவாறு வழங்குவதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

மலையேற அனுமதி சீட்டு வழங்கும் பணி சரிபார்ப்பு அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மூலம் அனுமதி சீட்டு திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில், முதலில் வரும் 2,500 நபர்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும். அந்த டோக்கனில் அனுமதி கோரும் நபரின் பெயர், ஆதார் எண், செல்போன் எண் எழுதித்தர கோரவேண்டும், ஆதார் அட்டை அசல் கட்டாயம் காண்பிக்கப்பட வேண்டும். சரிபார்ப்பு அலுவலர் விவரங்களை சரிபார்த்து கையொப்பம் இட்டு அனுப்ப வேண்டும்.

மாடவீதி மற்றும் கோவிலை சுற்றிலும் கூடுதலாக துப்புரவு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும் 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் வருகிற 5-ம் தேதி முதல் 8-ம்தேதி வரை இயக்கப்பட உள்ளது. 59 தற்காலிக கார் நிறுத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என பேசினார்.