symptoms and mechanisms of Madras eye: வேகமாக பரவிவரும் மெட்ராஸ் ஐ: அறிகுறிகளும் வழிமுறைகளும்

சென்னை: தமிழகத்தில் பரவிவரும் மெட்ராஸ் ஐ எனப்படும் கன்ஜக்டிவைடிஸ் நோயிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் பார்ப்போம்.

தற்போது பருவமழை தொடங்கியுள்ள காரணத்தினால் தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் கன்ஜக்டிவைடிஸ் எனப்படும் இமைப்படல அழற்சி ஏற்பட்டுள்ளது. கன்ஜக்டிவைடிஸ் -ஆல் ஏற்படும் அழற்சி அதாவது கண்ணின் வெண்மைப்பகுதி மற்றும் கண் இமைகளின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய திசுக்களில் ஏற்படும் அழற்சியாகும். கன்ஜக்டிவைடிஸ் பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் நோயாகும். மேலும் இது தொற்று நோயாக இருக்கும் காரணத்தினால் மற்றவருக்கும் பரவக்கூடியது.

கன்ஜக்டிவைடிஸ் அடையாளங்களும் அறிகுறிகளும் பின்வருமாறு:
பாதிக்கப்பட்ட கண்ணின் வெள்ளைப்பகுதி இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக மாறுதல், அதிகமான அளவில் கண்ணீர் சுரத்தல், கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு, அதிகப்படியான சளி வெளியேற்றம், கன்ஜங்டிவா / இமையிணைப்படலம் மற்றும் கண் இமைகளில் உண்டாகும் வீக்கம், கண்களில் எரிச்சல், கண்ணில் தூசி அல்லது வேறு வெளிப்பெருள் உள்ளது போன்ற உணர்வு பார்வையில் ஏற்படும் இடையூறு, காலை விழித்தவுடன் கண் இமைகளில் ஏதோ பசை போன்ற பொருள் ஒட்டி இருத்தல்.

கன்ஜக்டிவைடிஸ் கண்டறியும் முறைகள்:
மருத்துவ வரலாறு, அடையாளங்கள், அறிகுறிகள் மற்றும் கண் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் கண் மருத்துவரால் இமைப்படல அழற்சி நோயை கண்டறிய முடியும். பார்வை பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று பரிசோதித்தல், இமையிணைப்படலம், வெளிப்புற கண் திசு மற்றும் கண்ணின் உட்புற அமைப்புகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்தல் போன்றவைகள் கண் பரிசோதனையில் உள்ளடங்குகிறது. வழக்கமாக இந்த நிலை நான்கு வாரங்களுக்கு குறைவாகவே நீடிக்கும். ஒரு வேளை இந்த நோய்தொற்று நீடித்திருந்தாலோ அல்லது சிகிச்சைக்கு ஏற்ற பலன் கிடைக்காத போதோ ஒரு கண் இமை படல தடவல் (Swaps) எடுக்கப்படுவதோடு பரிசோதனைக்கு அனுப்பப்படும்.

கன்ஜக்டிவைடிஸ் சிகிச்சை முறைகள்:
கன்ஜக்டிவைடிஸ் சிகிச்சை அதன் காரணிகளை பொறுத்ததே ஆகும். பாக்டீரியா நோய் தொற்றுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நிறைந்த சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. வைரல் நோய்த்தொற்றுகள் வழக்கமாக அதன் போக்கிலேயே செயல்படும் குளிர்ந்த பொருள் கொண்டு ஒத்தடம் கொடுத்தல் மற்றும் செயற்கை கண்ணீர் போன்றவைகள் இதன் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. ஒவ்வாமையால் ஏற்படும் இமைப்படல அழற்சிக்கு தகுந்த கண்சொட்டு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. கன்ஜக்டிவைடிஸ் ஏற்பட்டிருக்கும் போது காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

கன்ஜக்டிவைடிஸ் தடுப்பு நடவடிக்கைகள்:
உங்களது பாதிக்கப்பட்ட கண் / கண்களை தொடுதல் கூடாது. கைகளை முறையாக கழுவுதல் வேண்டும். துண்டுகள் மற்றும் அழகு சாதனப்பொருட்களை பகிர்தலை தவிர்த்தல் வேண்டும்.

எனவே, பொதுமக்கள் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி கன்ஜக்டிவைடிஸ் கண் நோயிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

Let’s take a look at the ways to protect yourself from conjunctivitis known as Madras Eye which is spreading in Tamil Nadu.