Parking fee increase at Chennai airport: சென்னை விமான நிலையத்தில் அதிநவீன மல்டி லெவல் கார் பார்க்கிங்: கட்டணம் உயர்வு

சென்னை: As multilevel car parking at Chennai airport comes into use from 4th, the fare will be hiked. சென்னை விமான நிலையத்தில் அதிநவீன 6 அடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் 4ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அதிநவீன 6 மாடிகள் கொண்ட மல்டி லெவல் கார் பார்க்கிங் ரூ. 250 கோடி செலவில் இரண்டரை லட்சம் சதுர அடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 2,150 கார்களை ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். மேலும் இங்கு மின்சார வாகனங்களுக்கும் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் ஏற்றும் கருவிகளும் இந்த பார்க்கிங்கில் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த பார்க்கிங் வசதி செயல்பாட்டுக்கு வரும் என இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் அதில் பல்வேறு நிர்வாக காரணங்களால் இந்த கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் வரும் டிசம்பர் 4ம் தேதி அதிகாலை 00.01 மணியிலிருந்து இந்த கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வரும் என விமான நிலைய ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. இந்த புதிய அதிநவீன கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வருவதை ஒட்டி தற்போது பயன்பாட்டில் இருக்கும் தரைதள பழைய கார் பார்க்கிங் வரும் 3ம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் மூடப்படுகிறது.

இதனால் அங்கு கார்கள் நிறுத்த அனுமதி இல்லை எனவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்களுக்கு வரும் அனைத்து வாகனங்களும் புதிய 6 அடுக்கு மல்டி லெவல் பார்க்கிங்கில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து புதிய கார் பார்க்கிங்கில் கட்டணங்களையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணங்கள்பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை நிறுத்துவதற்கு ரூ. 20 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதற்கு மேல் 2 மணி நேரம் வரை நிறுத்துவதற்கு ரூ. 25 ஆகும்.

தற்போதைய புதிய மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் இரு சக்கர வாகனங்கள் 30 நிமிடங்கள் வரை நிறுத்துவதற்கு ரூ. 20 தான். ஆனால் 2 மணி நேரம் வரை நிறுத்தினால் ரூ. 30 ஆகும். மேலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ரூ.5 என உயர்ந்து இருந்து 24 மணி நேரம் வரை நிறுத்தி இருந்தால் கட்டணம் ரூ. 90 ஆகும்.

கார்களுக்கு 30 நிமிடத்திற்கு தற்போது ரூ. 40 வசூலிக்கப்படுகிறது. புதிய கார் பார்க்கிங்கில் 30 நிமிடங்களுக்கு ரூ. 75 ஆகும். ஏற்கனவே உள்ள பழைய கார் பார்க்கிங்கில் 2 மணி நேரம் வரை நிறுத்துவதற்கு ரூ.100 என இருந்த கட்டணம் புதிய கார் பார்க்கிங்கில் 2 மணி நேரம் வரை நிறுத்துவதற்கு ரூ. 150 ஆகும். மேலும் ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கு ரூ.50 என உயர்ந்து 24 மணி நேரம் வரை கார்கள் நிறுத்தி இருந்தால் ரூ. 500 கட்டணமாக வசூலிக்கப்படும்.