22 appointment orders by TNPSC: டிஎன்பிஎஸ்சி மூலம் 22 பேருக்கு பணி நியமன ஆணைகள்; முதல்வர் வழங்கல்

சென்னை: The Chief Minister of Tamil Nadu issued appointment orders to 22 candidates selected through TNPSC. டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 22 பேருக்கு தமிழக முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 22 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று (17.9.2022) இந்து சமய அறநிலையத்துறையின் சார்நிலைப்பணியில் செயல் அலுவலர் நிலை-1 பணியிடத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 22 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களை முறையாக பராமரித்தல், பாதுகாத்தல் மற்றும் நிர்வகிக்கும் பணிகளை செயல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த செயல் அலுவலரின் பணிகளில் தொய்வு ஏற்படாத வண்ணம், காலிப் பணியிடங்கள் அவ்வப்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது காலியாகவுள்ள 22 செயல் அலுவலர் நிலை 1 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெகுமாகுருபரன், கூடுதல் ஆணையர் இரா.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.