1,500 policemen for security in Coimbatore: கோவை மாநகரில் 1,500 போலீசார் பாதுகாப்பு

கோவை: காவலர் செல்வராஜ் நினைவு தினத்தையொட்டி கோவை மாநகர் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 1997-ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி, கோவை உக்கடம் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணியாற்றிய செல்வராஜ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை நடந்த அடுத்த நாள், கோவையில் பெரிய கலவரமாக மாறி, கடைகள் சூறையாடப்பட்டு வன்முறை மாறியது. இந்தக் கலவரத்தில் 19 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 29ம் தேதி காவலர் செல்வராஜ் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் போலீஸ்காரர் செல்வராஜ் நினைவு தினத்தையொட்டி கோவை மாநகர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கோவையில் ‘சென்சிடிவ்’ ஏரியாக்களாக கருதப்படும் உக்கடம், கோட்டைமேடு, டவுன்ஹால், செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழக அதிரடிப்படை போலீசார், சிறப்பு படை போலீசார் உள்ளிட்டோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கோவை சுங்கம், கோட்டைமேடு, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், சுந்தராபுரம், உக்கடம் உள்ளிட்ட இடங்களில் போலீசர் தீவிர வாகன சோதனை நடத்தினர். வருகிற 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் ஆகும். எனவே கோவை நகரம் மற்றும் புற நகர் பகுதியில் வருகிற 7-ம் தேதி வரை போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், சமீபத்தில் கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவமும், பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம், காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு (என்ஐஏ)போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் முகமது அசாரூதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், தமிழகத்தில் 45க்கும் மேற்பட்ட இடங்களில், இவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களின் வீடுகளில், என்ஐஏ அதிகாரிகள் குழு சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளது.

மேலும், மங்களூருவில் ஆட்டோ ஒன்றில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில், காயமடைந்த ஷாரிக், கோவையில் சில தினங்கள் இருந்ததாக கிடைத்த தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷாரிக், தீவிரவாத இயக்க தொடர்புடையவர் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், போலீசார் உஷார் நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1,500 policemen are engaged in security work across Coimbatore on the occasion of Policeman Selvaraj Memorial Day.