சென்னை:12.28 lakh vaccinations were administered across Tamil Nadu on a single day yesterday தமிழகம் முழுவதும் நடைபெற்ற 35வது சிறப்பு மெகா கோவிட்- 19 தடுப்பூசி முகாமில் 12.28 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50,000 சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற 34 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 10 இலட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள்.
ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் படி, 12-14 வயதுயுடைவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் 16-03-2022 அன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இதுவரை (04-09-2022) 19,76,537 (93.19%) பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 14,98,193 (70.64%) பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 15-17 வயதுயுடைவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் 03-01-2022 அன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இதுவரை (04-09-2022) 30,50,267 (91.16%) பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 25,81,517 (77.15%) பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை வழங்கும் திட்டம் 10-01-2022 அன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இதுவரை (04-09-2022) மொத்தம் 70,41,453 (16.94%) பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று (04-09-2022) நடைபெற்ற சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட 12,28,993 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 78,337 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 2,91,028 பயனாளிகளுக்கும் மற்றும் 8,59,628 பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.39% முதல் தவணையாகவும் 90.61% இரண்டாம் தவணையாகவும் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்ட சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களை நேரடி கள ஆய்வு செய்தார்கள். இதில் மக்கள் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை சுகாதார செயலாளர் டாக்டர்.பி.செந்தில் குமார், மேயர் ஆர். பிரியா, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, இணை ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவாத், துணை ஆணையாளர் (கல்வி) டி.சினேகா, மாநகர நல அலுவலர் மற்றும் மாநகர மருத்துவ அலுவலர் கலந்து கொண்டனர்.



