10 kg silver armor for Pasumbon Muthuramalingath Devar:பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு 10 கிலோ வெள்ளிக்கவசம்: ஓ.பி.எஸ். வழங்கல்

மதுரை: 10 kg silver armor for Pasumbon Muthuramalingath Devar. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை நாளான இன்று, அவரது நினைவிடத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசம் வழங்கி ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமைக்கழகம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவரும்; ஆன்மீகம், – தேசியம், பொதுவுடைமை, ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றை குறிக்கோள்களாகக் கொண்டு செயல்பட்டவரும்; தமிழகம் உயர, தமிழ்நாடு வளம் பெற, தமிழ்ச் சமுதாயம் மேம்பட உழைத்தவரும்; ‘வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம், விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்’ என்று முழங்கியவரும்; தன்னலமின்றி நாட்டிற்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும், தொழிலாளர்களின் நலனுக்காகவும், அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காகவும் அரும்பாடுபட்டவருமான தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 115-வது பிறந்த நாள் மற்றும் 60-வது குருபூஜை இன்று (30-10-2022) கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் இதர சுப நாட்களில் வெள்ளிக் கவசம் அணிவிக்கும் பொருட்டு, 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசத்தை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடக் காப்பாளர் ந. காந்தி மீனாள் அம்மையாரிடம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வழங்கி மரியாதை செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பசும்பொன்னை நோக்கி 50க்கும் மேற்பட்ட கார்களில் ஆதரவாளர்களுடன் சென்ற ஓ.பன்னீர்செல்வம் விரைந்துள்ளார். அப்போது வாகன தடுப்பில் ஒரு கார் மோதவே, அது ஏ.டி.எஸ்.பி.யின் காரில் மோதியது. இதில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு காவலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.