Team India wins:கடைசி டி20 போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி

ராஜ்கோட்: Team India wins T20I series against Sri Lanka. கடைசி டி20 போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தன. இதனைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் கோப்பையை கைப்பற்ற இரு அணிகளும் களமிறங்கின.

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தப்போட்டியில் டாஸ் வென்றது. இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக இஷன் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இஷன் கிஷன் முதல் ஓவரிலேயே 1 ரன் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி பவர்பிளே வரை அதிரடி காட்டி 16 பந்தில் 35 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

இதனைத்தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி 21 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். நிதானமாக ஆடி வந்த சுப்மன் கில் 36 பந்தில் 46 ரன் எடுத்திருந்த நிலையில் ஹசரங்கா பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் ஹர்த்திக் பாண்டியா, தீபக் ஹூடா இருவரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 45 பந்தில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் தனது 3வது சதத்தை பதிவு செய்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் 112 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரர் நிசங்கா, 15 ரன்னிலும் குசல் மெண்டிஸ் 23 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் வந்த வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர். பெர்னண்டோ 1 ரன்னில் வெளியேறினார்.

தனஞ்ஜெய டி சில்வா 22 ரன்னிலும், அசலங்கா 19 ரன்னிலும், கேப்டன் தசன் ஷனகா 23 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில், 16.4 ஓவரில் இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இலங்கையை 91 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இந்தியா அணியில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக், ஹர்திக் பாண்டியா, சாஹல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த தொடரின் நாயகன் விருது அக்சர் படேலுக்கும், நேற்றைய ஆட்டநாயகன் விருது சூர்யகுமார் யாதவுக்கும் வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.