Chennai Marathon Competition:சென்னை மாரத்தான் போட்டி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை ரன்னர்ஸ் அமைப்பு (Chennai Marathon Competition) சார்பாக நீரழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு நிதி திரட்டும் நோக்கிலும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் சென்னையில் இன்று (ஜனவரி 8) அதிகாலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் இருபாலருக்குமான மாரத்தான் பந்தயம் நான்கு வகையிலாக நடத்தப்படுகிறது. அதன்படி முழு மாரத்தான் 42.195 கிலோ மீட்டர், 32.186 கிலோ மீட்டர், மினி மாரத்தான் 21.097 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் தூரம் என்று நான்கு வகைகளில் போட்டி நடைபெறுகிறது.

முழு மாரத்தான் பந்தயம் நேப்பியர் பாலத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அருகில் முடிவடைகிறது.

இந்நிலையில், மாரத்தான் போட்டியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து 10 கிலோ மீட்டர் தூர பந்தயம் அதிகாலை 6 மணிக்கு நேப்பியர் பாலத்தில் இருந்து சாந்தோம், அடையாறு வழியாக தரமணியில் முடிவடைகிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இதில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.