Rs.1 crore each bronze winning teams: வெண்கலப் பதக்கம் வென்ற இரு அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை

சென்னை: Prize money of Rs.1 crore each for the two bronze medal winning teams: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற 2 இந்திய அணிகளுக்கும் தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

95 ஆண்டு கால செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்றில் இந்தியாவில் முதல் முறையாக, தமிழகத்தின் தலைநகரமான சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 29ம் தேதி தொடங்கியது.

இந்தப்போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 1,736 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கடந்த 2 வார காலமாக 11 சுற்றுகளாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி திருவிழா நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. அர்மேனியா வெள்ளிப்பதக்கத்தையும், இந்தியாவின் 2-வது அணி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றது.

இதேபோல், பெண்கள் பிரிவில் உக்ரைன் அணி சாம்பியன் ஆனது. வெள்ளிப்பதக்கத்தை ஜார்ஜியாவும், வெண்கலப்பதக்கத்தை இந்தியாவின் 1-வது அணியும் பெற்றது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கங்கள் வென்ற இரண்டு இந்திய அணிகளுக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத்தொகை அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது. இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் பொதுப் பிரிவில் இந்திய பி அணியும் , பெண்கள் பிரிவில் இந்திய ஏ அணியும் என இரண்டு அணிகள் பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 44-வது பன்னாட்டு சதுரங்க விளையாட்டு போட்டிகளில் பொதுப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பி அணிக்கும், பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஏ அணிக்கும் (பெண்கள்) ஆகிய இரண்டு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக தலா ரூ.1 கோடி வழங்கி தமிழக அரசு சிறப்பிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.